சனி, 24 டிசம்பர், 2011

உயர்ந்தது எல்லாம்.....!


உயர்ந்தது எல்லாம் எல்லாக் காலத்திலும் உயர்ந்தது இல்லை

செவ்வாய், 15 மார்ச், 2011

<>அக்கராயன் : ஆவணப்படம்<>


http://www.youtube.com/v/bq5dyjAbIZM&hl=en_GB&feature=player_embedded&version=3

>

<>உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்<>


பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்

<> தீபச்செல்வன் <>


[இன்னுமின்னும் அறியாத சேதிகள்

அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன ]



நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து

எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சகோதரியே! உன்னை உரித்து

சிதைத்தவர்களின் கைளிலிருந்து

எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.



கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு

என்ன நேர்ந்திருக்குமென்று

தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு

இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு

உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்

எண்ணிக்கையற்ற முனைகளில்

நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.



உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்

யார் உன்னை தின்றார்கள் என்பதையும்

உனது தொலைக்காட்சியில்

நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.

நீ நடித்த பாடல்களும் படங்களும்

ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்

உனது பாதிப்படம் ஒரு மூலையில்

பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.



அதே படைகளினால் கவலிடப்பட்ட

நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது

தாயைப்போலவே ஒருத்தி

தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.

ஆண்குறிகளை வளர்த்து

இரத்தத்தை படையலிட்டிருக்கிற

படைகளின் யுத்த முனைகளில்

உன் சீருடைகளை

கழற்றி எறிந்திருக்கிறார்கள்.

உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்

தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது



முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே

நீ சரணடைந்திருக்கிறாய்.

துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்

ஒரே மாதிரியாய்

வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.



முற்றத்தில் தெருவில் வயல்களில்

கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்

சீருடைகள் முதலான உடைகளும்

இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்

மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.

என்னிடம் வாங்கிச் சென்ற

கவிதையை எங்கு போட்டிருப்பாய்?

__________________________________

(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009



தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 'வேலி' என்ற குறும்படத்தில் மிகத்திறம்பட நடித்திருந்தார். 'வேலி' படம் பற்றி நான் வீரகேசரியில் எழுதிய பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'ஈரத்தீ' படத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். பாடல்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக இருந்திருக்கிறார். வீடியோ, எடிட்டிங், எழுத்து போன்ற எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இரக்கமும் அன்பும் கொண்ட மிகுந்த எளிமையான - கருத்தாழம் கொண்ட 'சிறந்த' போராளியாக வாழ்ந்தவர்.  -சனி, 26 டிசம்பர், 2009





 

புதன், 2 மார்ச், 2011

<>இசைப்பிரியா நடித்த ”வேலி” குறும்படம்!<>

போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின் தொகுப்பாளராகவும் செயற்பட்டார்.


பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார். காயம் அடைந்த நிலையிலேயே அவர் படையினரிடம் சிக்கிச் சீரழிந்தார் என்ற செய்தியே வெளிஊடகங்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த ”வேலி” குறும்படம்


 


1981இல் மே மாதம் 02ஆம் திகதி பிறந்த இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. 1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் அடங்குகிற ஊடகத்துறையான நிதர்சனபிரிவுப் போராளியாக இருந்தார். நீண்ட காலமாக நிதர்சனப் பிரிவிலேயே இருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடக வெளியீடாக வெளிவரும் காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு பொரும்பாலானவற்றை இசைப்பிரியாவே அறிமுகம் வழங்கி தொகுத்தளித்திருக்கிறார். இளம் அறிவிப்பாளராக அந்த ஒளிவீச்சுக்களில் அறிமுகமாகிய இசைப்பிரியா ஈழத் தமிழர்களுக்கேயுரிய முறையில் வீடியோ சித்திரங்களை அறிமுகப்படுத்துபவர். ஈழ மக்களின் கனவுகள், ஏக்கங்கள், மண்ணுடன் மண்ணான வாழ்வுகள், இடம்பெயர் அலைச்சல்கள், நிலப்பிரிவுகள், மனிதத்துயரங்கள், போர்க்கொடுமைகள், போர்க்களங்கள், போர் வெற்றிகள் இலட்சியக் கருத்துக்கள் என்று விடுதலைப் போராட்டத்தின் அன்றைய காலத்து காட்சிகளை ஒவ்வொரு மாதமும் கொண்டு வரும் ஒளிவீச்சை குறித்த தன்மைகளை அதற்கு ஏற்ப அறிமுகப்படுத்தி இசைப்பிரியா வழங்குபவர்.


விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்று தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியாக பரிணமித்தது. அப்பொழுது தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராக இசைப்பிரியா கடமையாற்றினார். போராளிகளின் ஊடகப் பிரிவில் மாதாந்தமாக ஒளிக்காட்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிதர்சனம், ஒரு தேசிய தொலைக்காட்சியாக உருவாகிய வேளையில் செய்திப்பரிவில் இருந்த பணிகளை செம்மையாக இசைப்பிரியா செய்திருக்கிறார். ஊடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர் தன்னை ஒரு ஊடகப் போராளியாக்கி போராட்டத்திற்கு உன்னதமான பங்களித்தார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக் கொண்ட இசைப்பிரியா வேம்படி இந்து மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றிருந்தார். 1996இல் இடம்பெயர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்து கற்றிருந்தார். பின்னர் உயர் தரக் கல்வியை கற்றுக் கொண்டிருந்தபொழுது அதனை இடை நிறுத்தி ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஈழத்தின் அழகி என்று சொல்லத்தக்க வகையில் ஈழப் பெண்களின் அழகின் குறியீடான தோற்றத்தைக் கொண்டவர். மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியப் பாங்கும் கொண்ட இசைப்பிரியா ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு போராட வேண்டும் என்று தன் இளவயதில் போராட்டத்தில் இணைந்தவர்.

தமீழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் வகித்த பங்கு முக்கியமானது. தொலைக்காட்சியின் தொடக்க கால செய்திப்பரிவுப் பொறுப்பாளராக இருந்த இசைப்பிரியா பின்னர் ஒரு படைப்பாளியாக மாறி தேசியத் தொலைக்காட்சிக்கு பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். இசைப்பிரியா என்றதும் எனக்கு ‘துயிலறைக்காவியம்’ என்ற விவரண நிகழ்ச்சிதான் ஞாபகத்து வருகிறது. அங்கு பணிபுரிந்த ஒவ்வொரு படைப்பாளிகளின் பின்னாலும் அவர்களின் பெயர்கள் அடைமொழியாக இருக்கும். இசைப்பிரியா குரல் கொடுத்து ஒலிபரப்பாகி வந்த துயிலறைக் காவியம் என்ற நிகழ்த்து அந்த நிகழ்ச்சியை எழுதுபவரைவிட இசைப்பிரியாவின் குரலையே அதிகமாய் நினைவு படுத்துகிறது. மிக இயல்பான எதார்த்தமான நவீனத் தன்மை மிக்க வாசிப்பும் குரலும் அந்த நிகழ்ச்சியை மிகவும் பெறுமதியாக்கியது.

இசைப்பிரியாவின் குரலில் ஒளித்த அந்த ‘துயிலறைக்காவியம்’ என்ற நிகழ்ச்சி மாவீரர்களைப் பற்றியது. துயிலறைக்கடிதங்கள் போல கடித அமைப்பில் உருவாக்கப்படும். மாவீரர் ஒருவரது வரலாறு குறித்து பதிவு செய்யும் அந்த நிகழ்ச்சியில் மாவீரர்களைப் பற்றி அவர்களது பெற்றோர் நண்பர்கள், சகபோராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், தலைவர் என அனைவரும் சாட்சியமாக பதிவு செய்வார்கள். செவ்வாய்கிழமைகளில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். ஈழக் கனவுக்காக போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலியாகவும் பதிவாகவும் நினைவுபடுத்தலாகவும் முக்கியம் பெறும் அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் மிகத் தனித்துவமாக ஒலித்திருக்கிறது.

கவிதைகளை விபரணச் சித்திரங்களாக்குகிற வேலைகளில் அவர் ஈடுபட்டார். புதுவை இரத்தினதுரை, செந்தோழன், ஆதிலட்சுமி சிவகுமார், வீர போன்றவர்களின் கவிதைகளை இப்பிடி விவரணங்களாக்கியிருக்கிறார். என்னிடமும் கவிதை ஒன்றை கேட்டார். தருகிறேன் என்று சொல்லி வாரக் கணக்காகி மாதக் கணக்கில் காலம் நீண்டு கொண்டு போனது. ‘தீபச்செல்வன் என்ன மாதிரி கவிதை தருவிங்களே?’ என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டபார். இசைப்பிரியாவைக் காணும் பொழுதுதெல்லாம் ‘எழுதித் தருகிறேன் எழுதித் தருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் நீளமாக அன்றைய சூழலை வைத்து ஒரு பிரதி எழுதிக் கொடுத்தேன். சில நாட்களில் அதற்கு குரல் கொடுத்து படத் தொகுப்பாக்கம் செய்திருந்தார்.
தேசியத் தொலைக்காட்சியில் அவர் பல வேலைகளை செய்திருக்கிறார். வெறுமனே குரல் கொடுப்பதற்கு அப்பால் அவற்றை படத் தொகுப்பு செய்வது, படைப்பது, பிரதிகளை எழுதுவது, காட்சிப் பிடிப்புக்களை இயக்குவது, காட்சிகளை தேடிப் பெறுவது, கமராக்களை கையாள்வது என எல்லாத் துறையிலும் அறிவுபூர்வமாகவும் நுட்பமாகவும் இயங்கினார். நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் அவர் வளர்ச்சி பெற்று வந்தார். படத்தொகுப்பாக்கம் செய்வது போன்ற கணணி ரீதியான அறிவை பெற்றுக் கொள்ள இசைப்பிரியாவிடம் இருந்த ஆர்வமே முக்கிய காரணம். அன்றைய நாட்களில் பெண் படைப்பாளிகளின் தொலைக்காட்சித் தயாரிப்புக்கள்தான் மிகச் சிறந்தவை என்றகிற அளவுக்கு நல்ல அப்பிராயம் இருந்தது. அதற்குள் இசைப் பிரியா போன்ற ஊடகப் போராளிகளின் அர்பணிப்பும் இலட்சியப் பாங்கும் கொண்ட பணிதான் காரணமாக இருந்தது.

செய்தித் தொகுப்பாளராகவும் செய்தி எழுதுபவாகவும் பணியாற்றிய இசைப்பிரியா உதிரிகளாக பல நிகழ்ச்சிகளுக்கு குரல் வழங்கியிருக்கிறார். நடனத்திறமையும் கொண்டவர். நேர்காணல்களிலும் ஈடுபட்டிருக்கிறார். கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் ‘சாலை வழியே’ என்ற அபிப்பிராய நிகழ்ச்சிகளையும் செய்திருக்கிறார். ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற குறும்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

இசைப்பிரியாவை அதிகம் வெளி உலகிற்கு அல்லது ஈழத் தமிழ் மக்களுக்கு வெளிக்காட்டியவை அவரது முகம், குரல், நடிப்பு என்பனவைதான். தொலைக்காட்சியில் ஆவண வீடியோத் தொகுப்பில் அவர் அறிவிப்பாளராக படைப்பாளியாக இருந்து செம்மையாக இயங்கியதுடன் ஈழப் படங்களிலும் பாடல்களிலும் நடித்த பொழுது அவர் இன்னும் பேசப்பட்டார். இசைப்பிரியா பெரும்பாலான ஈழப்பெண்களின் முகபாவமும் மனமும் கொண்டவர். அவரது நடிப்புக்களில் அந்தத் தன்மைகள் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கிடக்கும். இசைப்பிரியா நடித்த படங்களில் ‘ஈரத்தி’ என்ற நீளப் படமும் ‘வேலி’ என்ற குறும்படமும் முக்கியமானது.

ஈரத்திபடத்தில் முழுக்க முழுக்க ஈழத்து சாதாரண பெண்ணைப்போல வருகிறார். ஈழத்துப் பெண்களுக்கு இருக்கிற குணங்களை மிக இயல்பாக பிரதிபலித்திருப்பார். அந்தப் படத்தில் இவரது சகோதரியாக வருகிற போராளியுடனான உரையாடல்கள்ல்கள், தம்பியாக வருகிற பாத்திரத்துடனான உரையாடல்கள், அம்மாவுடனான உரையாடல்கள், காதலனுடான உரையாடல்கள் என்பன மனதை விட்டகலாது நிற்கின்றன. ஈரத்தி படம் பலவகையிலும் முக்கியமான படம் என்று அந்தப் படம் வெளியாகிய நாட்களில் எழுதிய குறிப்பில் எழுதியிருந்தேன். அந்தப் படத்தை இயக்கியது, திரைக்கதை எழுதியது, படப்பிடிப்பு செய்தது, படத் தொகுப்பு செய்தது எல்லாமே பெண் போராளிகள்தான். அத்தோடு படத்தின் சிறப்புக்கு இசைப்பிரியா போன்ற போராளிகளின் நடிப்பும் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.
இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே என்னை அதிகம் பாதித்த படம். அந்தப் படத்தையும் முல்லை யேசுதாசனின் ‘துடுப்பு’ படத்தையும் குறித்து இரண்டு பெண்ணியக் குறும்படங்கள் என்று வீரகேசரிப் பத்திரிகையின் நிறப்பிரிகை பகுதியில் எழுதியிருந்தேன். அதைப் பார்த்த இசைப்பிரியா ‘எங்கட படத்தைப் பற்றி வீரகேசரியில எழுதியிருந்தியள் நன்றி’ என்றார். ‘நல்லா இருந்தது சந்தோசமாயிருந்தது. நிமலாக்கவும் சொல்லச் சொன்னவா’ என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார். வேலி படத்தில் இசைப்பிரியாவின் லட்சுமி என்ற பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை எடுத்துப் பேசுபவை.

வேலி படத்தில் முற்றிலும் வேறுபட்ட பாத்திரத்தில் இசைப்பிரியா நடித்தார். இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்கு காணி பார்க்கச் சென்ற கணவனை இராணுவம் கொலை செய்து மலக்குழிக்குள் போட்டுவிட எலும்புக்கூடு மட்டும் மிஞ்சி விடுகிறது. ஒரு பெண் குழந்தையுடன் தனித்து வாழும் பொழுது ஏற்படும் சமூக ஊடாட்டங்களே தொடர்ந்து கதையாகிச் செல்கிறது. யுத்தம் காரணமாக கணவர்களை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கிற ஆயிரம் ஆயிரம் பெண்களின் குறியீடாக வருகிறார் இசைப்பிரியா. வசனங்களை பேசும் விதமும் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டும் விதமும் ஈழப் பெண்களின் நிகழ்கால உணர்வை காட்டுகின்றன. ஈழப் பெண்களுக்கேயுரிய வலிமையையும் மிடுக்கையும்கூட இந்தப் படத்தில் இசைப்பிரியா அதிகம் வெளிக்காட்டுவார். அந்தப் படத்தில் வரும் இசைப்பிரியா போன்ற பாத்திரம் வகிக்கிற பல பெண்களை நான் பார்ததிருக்கிறேன். சமூகத்தின் வசைகளுக்கும் பழிப்புக்களுக்கும் எதிராக கடுமையாக போராடுகிறார்.

வேலி படத்தில் அகழ்விழி என்ற பெண் போராளியின் கமராவில் இசைப்பிரியா மிகவும் அழகாக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறார். ஈழத்தின் அழகி என்கிற அளவில் அவரை காட்டுகிற கோணங்களும் அளவுகளும் அமைந்திருக்கின்றன. இயல்பாக பாத்திரங்களுக்கு ஏற்ப அதன் உணர்வுகளை பிரதிபலித்து வாழ்பவர் இசைப்பிரியா. இப்பிடி இசைப்பிரியா ஒரு ஊடகப் போராளியாக பல வகையில் முக்கியம் பெற்றிருக்கிறார். பல பாத்திரங்களை வகித்திருக்கிறார். கனவுக்காக இலட்சியத்திற்காக ஊடகப் பிரிவில் முழுமையாக இயங்கி தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.

சரி பிழைகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டும் தன்மையும் நறுக்கென்று எதனையும் மனந்திறந்து பேசும் தன்மையும் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தன்மையும் இசைப்பிரியாவின் இயல்புகள் என்று என்னிடம் சொல்லிய முன்னாள் பெண்போராளி ஒருவர் எல்லோரையும் மதித்து நடந்து கொள்வதும், தனது கடமைகளில் கண்ணாக இருப்பதும் அவரது இயல்புகள் என்று குறிப்பிட்டார். இலட்சியத்தில் கொள்கையில் கனவில் புரிதலும் குளிர்ச்சியும் வலுவும் கொண்டவர் இசைப்பிரியா.

வன்னிப் போரின் இறுதிக் களத்தில் அவர் சரணடைந்த பொழுது அவரை இராணுவம் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்திருக்கிறது. வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு தாயாக அவர் கருவுற்று குழந்தையை சுமந்திருந்த நிலையில்தான் இப்படி வன்முறையால் சிதைத்துக் கொல்லப்பட்டார். இசைப்பிரியாவுடன் அவரது கருப்பையில் இருந்த குழந்தையையும் அவர்கள் கொன்றிருக்கிறார்கள். பல ஈழப் பெண்களுக்கு நடந்த துயரக் கொடுமை இசைப்பிரியாவுக்கும் நடத்திருக்கிறது. அது போல பல ஆண் போராளிகளும் பொதுமக்களும் இப்பிடி சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்ட்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளின் பின்னர் சரணடைந்த பல போராளிகள் இப்படி வதைக்களத்தில் கொல்லப்பட்டனர். மிகவும் பரிதாபகரமாக இரக்கமற்ற வகையில் சரணடைந்த போராளிகளை கொன்ற குருதியால் நமது நிலம் நனைந்து சிவந்து போயிருந்தது.

எல்லாச் சாபங்களும் எல்லாக் கண்ணீரும் எல்லா குருதிகளும் மகிந்த ராஜபக்ஷவை பாவமாக தொடர்கிறது. இந்த ஈழத் துயரம் மகிந்த மற்றும் அவரது வாரிசுகள் முதல் அவரது படைகள் வரை சந்ததிகளைக் கடந்து பழி தீர்க்கிற கொடும் சாபமாகி விட்டது. எல்லா விதமான அநீதிகளைக் கண்டும் ஈழத் தாய்மார்கள் நெஞ்சில் அடித்து அழுது திட்டினர். மகிந்தராஜபக்ஷ ஈழப் போராளிகளுடன் நடத்தியது நேரடியான போர் அல்ல என்பதையும் தந்திரம் நிறைந்த பல வழிகளில் போராளிகளை அழித்து ஈழப் போராட்டத்தை முடக்க பல குற்றங்களை இழைத்துள்ளார் என்பதும் ஈழத் தமிழர்களின் இருப்பையும் பிரக்ஞையும் இல்லாமல் செய்ய முற்பட்ட கொடுங்கோல் வேலை என்பதையும் குருதியால் நனைந்த ஈழ நிலம் அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

- தீபச்செல்வன் ( deebachelvan@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )



வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

முழு நீள "ஐ.டி." நகைச்சுவை

ஐ.டி. துறையை இந்த கலாய்ப்பது என்றால் ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கே சந்தோசம் தான். அதுவும் PM,TL வைத்து காமெடி பண்ணினால், அவர்கள்  விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.


'Jagguboys' குறும்படம் ஐ.டி துறையில் இல்லாதவர்களுக்கு கூட புரியும் படி நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள்.சமிபத்தில் வரும் சினிமா படங்களில் நகைச்சுவை காட்சிகளை விட நன்றாகவுள்ளது.குறிப்பாக, ஆணி புடுங்கும் இடம் Ultimate நகைச்சுவை.

22 நிமிட முழு நீள நகைச்சுவை குறும்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்தேன்.

ஒவ்வொரு Successful Employee பின்னாடி ஒரு Satisfied Manager இருக்கான் என்ற தத்துவத்தை இந்த குறும்படம் உணர்த்துகிறது.










5 சகோதரர்கள்









அற்புதம்




'வெற்றிப் பயணம்'

'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் ஜாலியான குறும்படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் படம் எடுக்க முயற்சிப்பது போல் சில இடங்களில் நாமும் சிரிக்க முயற்சிக்க வேண்டியதாக இருக்கிறது. கூட்டு முயற்சியில் நண்பர்களில் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை ஒரளவு ரசிக்கும் சொல்லியிருக்கிறார்கள்.





 
திருநங்கையை பற்றிய 'கோத்தி' குறும்படம்


கோத்தி

உள்ளத்தால் பெண்ணாக, உருவத்தால் ஆண்ணாக வாழும் திருநங்கையை பற்றிய குறும்படம்.

அன்பு ஆண்ணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன் மகனை பற்றி தெரிந்த தந்தை மகள் வாழ்க்கையை நினைத்து அவனை வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார். இரு பாலிலும் தன்னை காட்டிக் கொள்ள முடியாத அன்பு வளர்மதியாக மாறி இந்த சமூதாயத்தில் எப்படி வாழ்கிறான் என்பது தான் மீதி கதை.

பெண்ணாக மாற துடிக்கும் போதும், தெருவில் பிச்சை எடுத்து அடிவாங்கும் போதும் வெண்ணிலாவின் நடிப்பு பிரமாதம்.கதைக்கு பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம்.பல திருநங்கயர்களில் கேள்விகளை வளர்மதி அவர்களின் பிரதிநிதியாக கேட்கும் காட்சி அருமை.

இந்த குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சி.ஜே.முத்துகுமார். ஒரு திரைப்படத்தில் சொல்ல வேண்டிய கதை குறும்படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அடுத்த காட்சிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் எடுத்திருப்பதால், பார்வையாளருக்கு உண்டாக்க வேண்டிய பாதிப்பு மனதில் உருவாக்கவில்லை.



படத்தை பார்க்க....


 

 

 
குறும்படம் : என் மேல் விழுந்த மழைத்துளி


பதினைந்து நிமிடத்தில் ஒரு காதலை அழகாக சொல்ல முடியும் நிருபித்த தமிழ் குறும்படம். ஏற்கனவே... தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால், இரண்டுரை மணி நேரம் சொன்ன விஷயத்தை சில நிமிடத்தில் உணர வைப்பதை பாராட்டியாக வேண்டும்.

கதாநாயகனாக வரும் அருள், காதலில் காட்டும் முகபாவனையும் மிக அருமை. இறுதி காட்சியில் நடிப்பு ( 'சேது' விகிரம் ஞாபகம் வந்தாலும்) அனுபவத்து நடித்திருக்கிறார்.

'ஐயோடா...', 'சாம்பாரே' சொல்லும் போது 'கதாநாயகி' அஷ்யானா தாமஸ் குரல் கொஞ்சுகிறது. கண் சிமிட்டுவதும் அழகு. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் தெரிவதால் என்னையும் அறியாமல் அவளை காதலிக்க வைக்கிறார். ( என் மனைவி இந்த பதிவை படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்...). நடித்ததோடு இல்லாமல் 'சிறம் தொடும் மழைத்துளி...' என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

பாடலிலே இருவரது காதலை மனதில் பதிவைத்துவிட்டுகிறார் இசையமைப்பாளர் நந்தா.

தன் காதலி கொடுக்கும் பரிசு கொடுக்கும் , அதே பரிசில் தன்னை முடித்துக் கொள்ளுவதும் மனதை நெருடுகிறது. இரண்டு பேர் காதல் காட்சியை பார்க்கும் ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. (கதை, திரைகதை, வசனம், பாடல் எல்லாம் இவரே ! )

குறும்படம் என்றால் மெசேஜ் என்று சொல்லாமல் ஒரு காதல் கதையும் சொல்லலாம் என்று காட்டுகிறது இந்த படம்.


 

 
மறைபொருள் - maraiporul - tamil short film
 

ஞாயிறு, 9 ஜனவரி, 2011