செவ்வாய், 15 மார்ச், 2011

<>உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்<>


பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்

<> தீபச்செல்வன் <>


[இன்னுமின்னும் அறியாத சேதிகள்

அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன ]



நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து

எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சகோதரியே! உன்னை உரித்து

சிதைத்தவர்களின் கைளிலிருந்து

எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.



கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு

என்ன நேர்ந்திருக்குமென்று

தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு

இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு

உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்

எண்ணிக்கையற்ற முனைகளில்

நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.



உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்

யார் உன்னை தின்றார்கள் என்பதையும்

உனது தொலைக்காட்சியில்

நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.

நீ நடித்த பாடல்களும் படங்களும்

ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்

உனது பாதிப்படம் ஒரு மூலையில்

பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.



அதே படைகளினால் கவலிடப்பட்ட

நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது

தாயைப்போலவே ஒருத்தி

தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.

ஆண்குறிகளை வளர்த்து

இரத்தத்தை படையலிட்டிருக்கிற

படைகளின் யுத்த முனைகளில்

உன் சீருடைகளை

கழற்றி எறிந்திருக்கிறார்கள்.

உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்

தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது



முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே

நீ சரணடைந்திருக்கிறாய்.

துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்

ஒரே மாதிரியாய்

வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.



முற்றத்தில் தெருவில் வயல்களில்

கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்

சீருடைகள் முதலான உடைகளும்

இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்

மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.

என்னிடம் வாங்கிச் சென்ற

கவிதையை எங்கு போட்டிருப்பாய்?

__________________________________

(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009



தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 'வேலி' என்ற குறும்படத்தில் மிகத்திறம்பட நடித்திருந்தார். 'வேலி' படம் பற்றி நான் வீரகேசரியில் எழுதிய பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'ஈரத்தீ' படத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். பாடல்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக இருந்திருக்கிறார். வீடியோ, எடிட்டிங், எழுத்து போன்ற எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இரக்கமும் அன்பும் கொண்ட மிகுந்த எளிமையான - கருத்தாழம் கொண்ட 'சிறந்த' போராளியாக வாழ்ந்தவர்.  -சனி, 26 டிசம்பர், 2009





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக